Sunday, March 20, 2011

பிச்சைக்காரர்களை உருவாக்குவோம்

செந்தழல் ரவி பஸ்ஸில் கேட்டிருக்கிறார், இலவசங்களை எதிர்ப்பவர்கள் எத்தனை பேர் கலர் டிவி வாங்கவில்லை என்று. சட்டென நோக்கும்போது இதில் தார்மிக அடிப்படை இருப்பதாகத் தோன்றும். எனக்கும் இப்படித் தோன்றித்தான் நான் கலர் டிவி வாங்கவில்லை. வாங்கச் சொல்லி வற்புறுத்திய அம்மாவையும், அதைக்கேட்டு வாங்கச் சென்று வரிசையில் நின்ற மனைவியையும் கடுமையாகத் திட்டி வீட்டுக்கு வரச் சொன்னேன். இதில் தெரிவது கையாலாகாத கோபம் மட்டுமே அன்றி வேறில்லை என்பது, கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் புரியும்.

இலவசங்களைத் தந்தே இந்த மாநிலத்தைப் பிச்சைக்காரர்களின் கூடாரமாக மாற்றிக்கொண்டிருக்கின்றன திமுகவும் அதிமுகவும். இந்த இலவசங்கள் தரும் போதை நம்முடன் கூடப் பிறந்தது என நினைக்கிறேன். ஒருதடவை கோவை திமுக (செந்தமிழ்)மாநாட்டில் நடந்ததைக் கண்டு பத்ரி ‘இது தமிழ்க் குணம்’ என்ற ரீதியில் எழுதியிருந்தார். உண்மையில் இது இந்தியக் குணம் என்றுதான் நினைக்கிறேன். விமானத்தில் செல்லும்போது தரும் இலவசங்களை வீட்டுக்குக்கொண்டு வருவதில் தொடங்கிப் பலவற்றை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

இருபது நாள்களுக்கு முன்பு எங்கள் வீட்டுக்குச் செல்லும் வழியில் உள்ள ஒரு வீட்டில் கடும் கூட்டம். முற்றிலும் பெண்கள் கூட்டம். ஏதேனும் நாடக ஷூட்டிங் நடக்கிறதோ என்றுதான் முதலில் நினைத்தேன். பக்கத்தில் இருக்கும் ஒருவரிடம் கேட்டேன். அந்த அரசியல் பிரமுகர் வீட்டில் இலவசச் சேலை கொடுக்கிறார்களாம். சாரி சாரியாகப் பெண்கள் கூட்டம். அவர் ஏன் இலவசச் சேலை தருகிறார், அதை வாங்க ஏன் இந்தக் கூட்டம் - ஒன்றும் தெரியவில்லை.

எங்கேனும் இலவசம் என்று கொடுத்து அங்கே என் குடும்பத்தினர் யாரையாவது பார்க்க நேர்ந்தால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாவேன். ஆனால் இளமையில் அப்படி ஒரு வறுமைச் சூழலில்தான் வளர்ந்தேன். ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்கும்போது கூட இதே மன உளைச்சல். இத்தனைக்கும் காசு கொடுத்து வாங்குகிறோம். ஆனால் அங்கே தரப்படும் மரியாதை, இலவசம் வாங்குபவர்களுக்குத் தரப்படும் அதே மரியாதை மட்டுமே. இந்த அவமானங்களைத் தக்க வைத்துக் கொள்பவர்களை உருவாக்கிகொண்டிருக்கின்றன சுயமரியாதையில் தோன்றி சுயமரியாதையில் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தியக் கட்சிகள்.

அடிமையின் மோகம் என்ற வரியை எழுதியவனைக் கும்பிடத் தோன்றுகிறது. இரண்டு வார்த்தைகளில்தான் என்னவெல்லாம் சொல்லிவிட்டான். அந்த வரிக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள். இனி இலவசங்களை அறிவிக்கும் கட்சிக்கு வாக்கு கிடையாது என்று மக்கள் சொல்லவேண்டும். ஒரு கட்சி, ஏதேனும் ஒரே ஒரு முக்கியமான கட்சி, தங்கள் அறிவிப்பில் இதனைச் சொல்லவேண்டும். தாம் ஆட்சிக்கு வந்தால் எந்தவிதமான இலவசமும் இருக்காது. மாறாக இலவசங்களை மக்களே மற்றவர்களுக்குத் தருமளவுக்கு வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம் என்று அறிவிக்கவேண்டும்.

இன்று நடந்துகொண்டிருக்கும் நாற்காலிப் போட்டியில், அடிமையின் மோகத்தில் உழன்று கிடக்கும் மக்களுக்கு எதிராக எந்த ஒரு கட்சியும் இதனைச் செய்ய முன்வராது என்பது உறுதி. மாணவர்களுக்கு உணவு இலவசம் என்ற ஒரு நல்லெண்ணத்தில் தோன்றிய இந்த எண்ணம், இன்று ஓட்டு வாங்கும் கருவியாகப் போனது துரதிர்ஷ்டம். கல்வியை முன்வைத்து உணவு இலவசம் என்று சொல்லப்பட்ட விஷயம், ஒரு குடும்பம் உழைக்கவே வேண்டியதில்லை, வாழ்க்கை இலவசம் என்ற அளவுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

இதை எதிர்த்து இலவசங்களை நாம் புறக்கணிக்கலாம்.

ஆனால் இலவசத்தை வழங்குவது ஓர் அரசு. ஓர் அரசு வழங்கும் எதையும் வாங்கிக் கொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது. எனவே மக்கள் அந்த இலவசங்களை வாங்கிக் கொண்டால் அதனைத் தவறு என்று சொல்லமுடியாது. மாறாக, இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்காமல் அக்கட்சியைப் புறக்கணித்து இலவசங்களைப் புறக்கணிப்பதே நல்ல செயல். ஆனால் இது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படும் கதையாகத்தான் தோன்றுகிறது. அரசு தந்த இலவச டிவியை நான் வேண்டாம் என்று மறுத்துவிட்டாலும், வாங்குபவர்களைக் கேள்வி கேட்கமாட்டேன். கலர் டிவியை வாங்கிக் கொண்டு, இலவசங்களை எதிர்த்தாலும் நான் கேள்வி கேட்கமாட்டேன். அவர்கள் எதிர்ப்பது கட்சி அறிவிக்கும் இலவசங்களை. பெற்றுக்கொள்வது அரசு தரும் இலவசங்களை. உன்னதம் என்பது அரசின் இலவசங்களை மறுப்பதுதான் என்றாலும், பெற்றுக்கொள்வது குற்றமல்ல.

மேலும், ஒரு டிவியை ஒரு குடும்பம் வாங்கவில்லை என்றால் அது எவ்வாறு முறையாகப் பதியப்படுகிறது என்பது குறித்தோ, அந்த டிவி என்னவாகும் என்பது குறித்தோ தெளிவான தகவல்கள் இல்லை. நான் வாங்கிக்கொண்டதாகப் பதியப்பட்டு, அந்த டிவி தொடர்பில்லாத ஒருவரின் கைக்குச் செல்லும் ஊழலைத் தடைசெய்யவும் தெரியவில்லை. அப்படிச் செய்வது ஒரு நீண்ட, அலைக்கழிக்கும் பணியாக இருக்கும் பட்சத்தில் அதனைச் செய்யவும் முடியாது. இது ஒரு யதார்த்தப் பிரச்சினை.

இன்று காலை ஒரு முதியோர் இல்லம் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த இல்லத்தில் டிவி இல்லை என்ற பேச்சு வந்தது. அப்போது, ‘ஆஹா அந்த இலவச டிவியையாவது வாங்கிக் கொடுத்திருக்கலாம்’ என்று தோன்றியது. என் தார்மிகம் இந்த இடத்தில் தனக்கேற்ற தார்மிகமாக மாறிக்கொண்டுவிட்டது. இந்த இடம்தான் இலவசங்கள் நுழையும் இடம். இப்படித்தான் இயல்பிலேயே இலவசமோகமக்கள் வாக்களிக்கும் அடிமைகளாக மாறிப் போகிறார்கள்.

திமுக எல்லாவற்றையுமே இலவசமாக அறிவித்துவிடும் போலிருக்கிறது. ஓர் அரசுக்கு எவ்வளவு சுமை இருக்கலாம், இன்றைய சுமையின் தாக்கம் என்ன, அதிலிருந்து வெளிவர அரசு செய்யப்போவது என்ன என்பது பற்றிய தொலைநோக்கைவிட, பிச்சைக்காரர்களை உருவாக்குவது, ஆட்சியைப் பிடிப்பது இவற்றில்தான் திமுக கவனம் செலுத்தியிருக்கிறது. இதில் போதாக்குறைக்கு அரசியல் நோக்கர்கள் எல்லாம் கடந்த தேர்தலில் திமுகவின் வெற்றிக் காரணம் இலவசக் கதாநாயகனே என்று அறிவித்துவிட்டார்கள். நடைதுவன்ற வயதில் முதுமை முன்தள்ள பதவி பின் தள்ள கருணாநிதியும் இலவசக் கதாநாயகியைத் தேடிக் கண்டடைந்துவிட்டார். பிச்சைக்காரர்கள் தயார். ஆட்சி மட்டுமே பாக்கி.

ஜெயலலிதாவுக்கு வருவோம். கடந்த முறை தன்னை முந்திக்கொண்டு கருணாநிதி மக்களைப் பிச்சைக்காரராக்கி, போதாக்குறைக்கு அதிமுகவையும் பிச்சையெடுக்க வைத்த கடுப்பில் இருக்கிறார். இப்போது அவர்முன் இருக்கும் தெரிவுகள் இரண்டு. ஒன்று, போட்டிக்குப் போட்டியாக இலவசங்களை அறிவிப்பது. கருணாநிதி ஒரு கண்ணை இலவசமாகப் பிடுங்குவேன் என்றால் தான் இரண்டு கண்களையும் இலவசமாகப் பிடுங்குவேன் என்று அவர் அறிவிப்பது. இரண்டாவது தெரிவு, அத்தனை இலவசங்களையும் புறக்கணிப்பது, இலவசங்களுக்கு எதிராகவும் மக்களைப் பிச்சைக்காரர்களாக்குவது குறித்த கண்டனங்களையும் பதிவு செய்வது. இரண்டாவது தெரிவாக ஜெயலலிதா முன் இருப்பது என்று எழுதுவது எனக்கே ஓவராக இருக்கிறது. நிச்சயம் ஜெயலலிதா முதலாவதைத்தான் செய்வார். இன்னொரு ஐந்தாண்டு கால எதிர்க்கட்சி ஆட்சியை அவரால் கனவில்கூட நினைத்துப் பார்க்கமுடியாது.

இப்படி இலவசப் பிச்சைக்காரர்களைப் போட்டிப் போட்டு உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் இரண்டு கழகங்கள்.

இதில் நடக்கும் ஜாதி அரசியலைப் பார்ப்போம். ஓர் ஏற்றுக்கொள்ளமுடியாமைக்குள் நடக்கும் இன்னுமோர் ஏற்றுக்கொள்ளமுடியாமை! இடஒதுக்கீடு நிச்சயம் தேவையான ஒன்றே. அதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் கல்வி கற்கும் மாணவர்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமே லாப் டாப் என்கிறது திமுக தேர்தல் அறிக்கை. ஏன் அப்படி? பிராமணர்களிலும் உயர்த்தப்பட்ட ஜாதிகளிலும் உள்ள நிஜமான பிச்சைக்காரர்களுக்கு லாப் டாப் கொடுத்தால் என்ன பூமி விண்டுவிடுமா? இலவசங்களை எதிர்த்துக்கொண்டே, முற்படுத்தப்பட்ட ஜாதிகளில் உள்ள ஏழைகளுக்கு இலவசம் கேட்பது முரண் என்பது போன்ற மேம்போக்கான கேள்விக்குள் செல்ல இப்போது எனக்கு விருப்பமில்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

இன்று பிராமணர்களிலும் மற்ற முற்படுத்தப்பட்ட சாதிகளிலும் உள்ள ஏழைகள் பற்றிப் பேச எந்த நாதியும் இல்லை. முற்போக்காளர்கள், தீவிர எழுத்தாளர்கள், ஜார் மன்னர் தொடங்கி ஜப்பான் வரை கருத்துச் சொல்பவர்கள், அரசியலையே புரட்டிப் போடும் அரசியல் நோக்கர்கள் என்று யாரும் இதைப் பற்றிப் பேசமாட்டார்கள். பிராமணிய ஸ்டாம்ப் ஒருதடவை பட்டுடுத்துண்ணா ஜென்மத்துக்கும் போகாதுண்ணா! பிராமணர்களில் தினம் சமையல் வேலைகூட கிடைக்காமல் நிஜமாகவே தினப்பிச்சைக்காரர்களாகத் திரியும் எத்தனையோ பேரை எனக்குத் தெரியும். பிராமணர்களாகப் பிறந்து, ஜாதி மறுத்து, இன்று முற்போக்காய்த் திரியும் எந்த ஓர் அறிவுஜீவியும் இதனை ஆதாரத்துடன் மறுத்தால், அவரையே ஸ்ரீ ராகவேந்திரராக எண்ணிக் காலில் விழுகிறேன் என்று உறுதி கூறுகிறேன். இப்படி வாழ்க்கையற்ற முற்படுத்தப்பட்ட சாதி ஏழைகளைப் பற்றிப் பேசாமல், அதற்கு எதிர்த்திசையில் கருத்துத் தெரிவிப்பார்கள் அறிவுஜீவிகள். அதாவது அப்படிச் சொன்னால்தான் அறிவுஜீவிகள்!

லாப்டாப் எல்லா ஜாதி மாணவர்களுக்கும் கொடுக்கப்படவேண்டும் என்று சொல்வதுகூட இவர்களுக்கு ஸ்டாம்ப்பை வரவழைத்துவிடும் என்பதால் இதைப் பற்றிப் பேசுவதையே தவிர்ப்பார்கள். ஆழங்களுக்குள் செல்லாமல், மேம்போக்காக இலவசங்களையே எதிர்க்கிறோம் என்றோ, எதிலுமே ஒட்டுமொத்த ஜாதிப் பாகுப்பாடு தங்களுக்கு ஏற்றதல்ல என்றோ நழுவுவார்கள். இதில் ஒரே ஒரு குரூர திருப்தி என்னவென்றால், தங்களை முற்போக்காளர்களாகவும் நியாயஸ்தர்களாகவும் நினைத்துக்கொள்பவர்களையும் சேர்த்தே பிச்சைக்காரர்களாக்கி வைத்திருக்கின்றன திராவிடக் கட்சிகள்! அந்தவரையில் திராவிடக் கட்சிகளில் இலவச சோஷியலிஸம் பாராட்டப்படவேண்டியதே! இந்த முறை எத்தனை பேர் பிராமணர்களில் உள்ள ஏழைகளை பற்றியும், இதர முற்படுத்தப்பட்ட ஜாதிகளில் உள்ள ஏழைகளைப் பற்றியும் பேசுகிறார்கள் பார்ப்போம்.

இதில் சமூக ரீதியாக ஒருங்கிணையாத பிராமணர்களைப் பற்றியும் சொல்லவேண்டியிருக்கிறது. ஒன்றிணைந்து யாருக்கு ஓட்டுப் போடவேண்டும் என்று முடிவெடுக்கக்கூட வேண்டாம். யாருக்கு ஓட்டுப் போடக்கூடாது என்றுகூடவா முடிவெடுக்கக்கூடாது? குறைந்த பட்சம் எதிர்ப்பையாவது இவர்கள் கூர்மையாக்கலாம். இதை எளிதாக எழுதிவிட்டேன். ஆனால் ஒரு ஜாதியை இப்படி ஒருங்கிணைப்பது எளிதல்ல. ஒரு கட்சிக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு உடனே உடைந்துபோகும் ஜாதிக்குழுக்களைப் பார்க்கிறோம். என்ன, இது பிராமணர்களுக்கு கொஞ்சம் முன்பே நடந்துவிடுகிறது. :-)

இத்தனையையும் சொல்லிவிட்டு ஒன்றே ஒன்று சொல்லிவிடுகிறேன். சிரிப்பாணியாக வரலாம். என்ன செய்ய. எனக்கு ஜாதிகளில் நம்பிக்கை இல்லை. குலத் தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம்தான். ஐயமே இல்லை. ஆனால் சமூக ரீதியாக ஜாதி என்ற பெயரில் ஓர் அரசே முன்னின்று ஒரு ஜாதியை கீழாக்குவதில் உள்ள சமூக அநியாயம் பற்றிப் பேசவேண்டும் என்கிற உந்துதல் இருக்கிறது. அதைப் பற்றிப் பேசாதவர்கள் போலி அறிவுஜீவிகள் என்று உரக்கச் சொல்ல ஆசை இருக்கிறது. ஜாதிகளில் நம்பிக்கை இல்லை என்பதற்கும், ஜாதி பற்றிப் பேசுவதற்கும் இடையில் மயிரளவில்தான் வித்தியாசம். ஏற்றுக்கொள்ளமுடியாவிட்டாலும் அதுதான் வித்தியாசம்.

--ஹரன் பிரசன்னா

23 comments:

  1. இப்படியும் ஒருவர் சொன்னார் என்று எண்ணுகின்றேன். சொல்லி இரண்டாம் முறையாக ஆட்சியிலும் உள்ளார். அவர்தான் நரேந்திர மோதி.

    //ஒரு கட்சி, ஏதேனும் ஒரே ஒரு முக்கியமான கட்சி, தங்கள் அறிவிப்பில் இதனைச் சொல்லவேண்டும். தாம் ஆட்சிக்கு வந்தால் எந்தவிதமான இலவசமும் இருக்காது. மாறாக இலவசங்களை மக்களே மற்றவர்களுக்குத் தருமளவுக்கு வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம் என்று அறிவிக்கவேண்டும்.//

    ReplyDelete
  2. ராவுஜியோட பூநூல் வெளில வந்திடுறதுல என்ன ஆச்சர்யம்.

    சொதந்திரம் வாங்கி இம்மாம் வருசமாகியும் பேங்கிங், அரசு இன்ஸூரன்ஸ் நிறுவனங்கள் , இந்திய பெட்ரோல் நிறுவனங்களின் உயர்பதிவுகள் ஒரு குறிப்பிட்ட அம்மாஞ்சிகளிடமே இருப்பது பற்றி எதும் கருத்து சொல்வீங்களா

    ஹர ஹர சம்ம்போ

    ஓசில கொடுக்கிறது கேவலம்னா இந்த சப்பைக்கட்டு கட்டிட்டு ஏழைகளா எஞ்சாதியிலே இருக்கான்னு பாட்டு பாடுறது அதை விட கேவலம். ஆயிரம் ஆண்டு அடிமைத்தனத்தையும் கேவலங்களையும் சுமந்தவன் லேசா மூஞ்சி கழுவிக்கோன்னு சொல்ற மாதிரி இருக்கு சாமி..,

    ReplyDelete
  3. பைகானூர் சாமி, என் பூணூலை நான் பார்த்துக்கொள்கிறேன். சட்டைக்கு வெளியிலேயே போட்டுக்கொள்ளலாமா என்று கூட யோசிக்கிறேன். இதுவா முக்கியம், இதைவிடுங்கள்.

    ஆயிரம் ஆண்டுகாலம் கேவலங்களையும் அவமானங்களையும் சுமந்தவர்களுக்கு வேண்டாம் என்று யார் சொன்னது? அவர்களுக்கு நிச்சயம் தரவேண்டும் என்பதுதான் நியாயம். அதைப் பற்றிப் பேச்சு இல்லை.

    நான் பேசுவது முற்படுத்தப்பட்ட ஜாதிகளில் உள்ள ஏழைகளுக்கு. ஆயிரம் ஆண்டுகாலக் கேவலங்கள் என்ற போர்வையில், முற்படுத்தப்பட்ட ஜாதிமேல் கோவம் என்ற போர்வையில் வெறும் பிராமணத் துவேஷம் உள்ளவர்களுக்கு இது புரியாது என்பதும் எனக்குத் தெரிந்ததுதான்.

    ReplyDelete
  4. ஆமா.. ஆமா.. இவர் இலவசமாக ஐஃபோன் மட்டுமே வாங்குவார்! :-)

    ReplyDelete
  5. கட்டுரை அருமை...,

    வறுமையில் என்ன கீழ் ஜாதி, மேல் ஜாதி வேண்டியிருக்கிறது? கொஞ்சம் யோசிங்க பாஸ்...

    ReplyDelete
  6. வெளிப்படுத்திய கருத்து அதனைக் கருவாக்கி வெளியிட்ட விதம், வெளியிட கையாண்ட மொழி கட்டுரை குறிப்பிடும் தொலை நோக்கு இவை அனைத்தும் கூடி நான் இதுகாறும் படித்த மிகச் சிறந்த அரசியல் கட்டுரைகளில் இதுவும் ஒன்று..

    ஹரன் பிரசன்னாவுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்..

    ஆழ்ந்த கருத்துரை கொண்ட கட்டுரைத் தொகுப்பு ஒன்றை நூல் வடிவில் கிழக்கு வாயிலாக அவரிடமிருந்து எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  7. ஜாதிகளில் நம்பிக்கை இல்லை என்பதற்கும், ஜாதி பற்றிப் பேசுவதற்கும் இடையில் மயிரளவில்தான் வித்தியாசம். ஏற்றுக்கொள்ளமுடியாவிட்டாலும் அதுதான் வித்தியாசம்.
    Excellent post.

    ReplyDelete
  8. நான் மனதுக்குள் (என்னைப் போல் பலர்)நினைத்ததை அப்படியே உஎழுதி உள்ளீர்கள்.நன்றி.


    D.சுந்தர்வேல்

    ReplyDelete
  9. ஏழை எந்த ஜாதியில் இருந்தாலும் ஏழையே.

    ReplyDelete
  10. நல்ல அலசல்.

    அரசியல் கட்சிகள் லஞ்சமாகத் தரும் இலவசங்களை வாங்குவது இழிவானது என்ற கருத்தை மக்கள் மனதில் விதைப்பது எளிதல்ல. திருத்தவே முடியாத அளவுக்கு புரையோடிப் போய் விட்டது.

    தமிழகத்தின் பலதரப்பட்ட மக்களையும் குஜராத் அழைத்துச் சென்று அங்கு என்ன நடக்கிறது என்று காண்பித்து விட்டு வரவேண்டும்.

    ReplyDelete
  11. அரசு இன்ஸுரன்ஸ்,ரெய்ல்வேஸ்,கார்ப்பரேஷன்,...இன்னும் எவ்வளவோ துறைகள் சொல்லிக்கொண்டு போகலாம், இதிலெல்லாம் பிராமணர்களின் இருப்பு சதவீதம் வெகுவாக குறைந்துவிட்டது. சுஜாதா சொன்னது போல பிராமணர்கள் ஒன்று அமெரிக்கா செல்கிறார்கள் அல்லது சமையல் செய்கிறார்கள்.

    ReplyDelete
  12. நேற்று , இந்த இலவசங்களை முன் வைத்து, தயாநிதி பேசியதை பார்க்கும்போது,குமட்டலும்,எரிச்ச்ளும் வந்தது.
    ஹிந்து-விலோ,தினமலரிலோ, தமிழ்-பெபரிலோ தலையங்கம் வராதா வென எதிர்பார்த்து கொண்டிருந்தேன்
    மக்கள்-கவிஞரான, கனிமொழிக்கு கூடவா,இந்த திட்டங்களின் அபத்தம் புரிய வில்லை?

    ReplyDelete
  13. ப்ளாக்கர் தலைப்பு:tn votes ஆனால் பதிவுகளோ பின்னூட்டங்களோ அதற்க்கு துளியும் சம்பந்தம் இல்லாமல்.என்று தணியும் இந்த ஜாதி வெறி!!

    ஏதவது தொகுதியை பற்றியோ ,வாக்காளர்களை பற்றியோ,வேட்பாளர் பற்றி ,அவரின் வெற்றி வாய்பு பற்றி என்று ஏதாவது உருப்படியா எழுத பாருங்க

    ReplyDelete
  14. ஹலோ

    பதிவையெல்லாம் மாற்றமுடியாது. பதிவு சம்பந்தமில்லாமல் இருந்தால் வலைப்பதிவின் தலைப்பை மாற்றிக்கொள்ளுங்கள்.

    பின்குறிப்பு: கிழக்கு ஆஃபிஸில் இப்படித்தான் பேசிக்கொள்வோம். :))

    ReplyDelete
  15. Well written post. DMK's plank is Brahmin hatred. Its an outdated concept, but they cling on to it.

    ReplyDelete
  16. // ஒரு குடும்பம் உழைக்கவே வேண்டியதில்லை, வாழ்க்கை இலவசம் என்ற அளவுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.//

    ரொம்ப ஓவரா இருக்கே :-) இதுவா நிலைமை. அடுத்தது ஏதோ இலவசம் வாங்கினவங்க வேலை கிடைச்சா போகாம வீட்டுல சும்மா இருக்கறா மாதிரி ஒரு பிம்பம் வேற வருது.

    ReplyDelete
  17. இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லையென்றாலும் இதை பதிவு செய்ய விரும்புகிறேன்.
    இருக்கிற இலவச மற்றும் சலுகை பாஸ்கள் பத்தாது என்று புதிதாய் முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அறிவித்துள்ளது திமுக அறிக்கை. (அதிமுக என்ன இலவசம் அறிவிக்கப் போகிறதோ என்று பதைபதைப்பு வேறு உள்ளே).ஏற்கனவே 1000 கோடி ரூபாய் நஷ்டத்தில் ஓடும் போக்குவரத்துக்கழகம் இந்த சலுகையை எப்படி தாங்கும்? எல்லா மானியங்கள்,சம்பளம், செலவினங்கள் போகவே இவ்வள்வு நஷ்டம்.. கொஞ்சம் கூட யோசிக்காமல் அறிவிக்கிறார்கள். இதில் கூடுதல் மினி பஸ்களுக்கு வேறு அனுமதி உண்டாம்.. பாவம் போக்குவர்த்து தொழிலாளர்கள்.. அவர்கள் உழைப்பு,மேலும் டார்கெட் அடைய வில்லை என்றால் ஏச்சு, மெமோ..என்னவோ போங்க சார்? ஓசியில் ருசி கண்ட பூனை நாளை ஒசி இல்லையென்றால் பிறாண்டும். அப்போ தெரியும்..

    ReplyDelete
  18. .பெண்களுக்கு ஏதாவது சலுகை கொடுத்தா ஆண்கள் ஆண்கள்ள ஏழைகள் இல்லையானு நக்கல் பண்றதா
    .எனக்கும் வேணும்னு கேட்கனம்.
    கலைஞர் தான் ஜாதி மத வித்தியாசம் இல்லாம வீட்டுல பட்டதாரி இல்லன ஐந்து மதிப்பெண் என்று கொண்டு வந்தார்.நீதமன்றம் அதை அடித்தது.
    கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு கொண்டு வந்து பல ஆண்டு (சம்பத் என்று ஒரு நீதிபதி oc -sc bc-sc mbc -sc விட உயார்ந்ததுன்னு தீர்ப்பு சொல்லி முக்கள் வாசி சீட்டு முற்பட்டவர் தாழ்த்தப்பட்டவர் வாரிசுகளுக்கு கிடைக்கும் படி செய்தார்.அதையும் உச்ச நீதிமன்றம்
    தள்ளுபடி செய்தன.
    1993 நீதிமன்ற தீர்ப்பு முற்பட்டவர்களில் ஏழைகளுக்கு ஒதுக்கீடு என்பதை ஏற்று கொள்ளாமல் தள்ளுபடி செய்தது.
    அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு கல்லூரிகளில் ஒதுக்கீடு கொண்டு வந்தார்.அதையும் நீதிமன்றங்கள் அடித்தது
    இன்னொன்று அரசாங்க கல்லூரிகளில் அகில இந்தியா ஒதுக்கீட்டில் வந்தவர்களும் இருப்பார்..தமிழர்களுக்கு திட்டம் போடும் போது அவர்களை குறி வைத்து தானே போட வேண்டும்.AIEEE மூலம் சேர்ந்த பிற மாநிலத்தவர் இருப்பர்.அவர்களுக்கு அவர்கள் மாநிலம் விருது வழங்கும்/லேப் டாப் வழங்கும் இல்லன்ன ஒன்னுமே வழங்காது.நம்ம அரசாங்கம் எளிமையா தேவையானவர்களை கண்டுபிடிக்க சாதி ஒரு வழி.

    இதற்கான பண ஒதுக்கீடு அந்த அந்த துறைகளில் இருந்து (தாழ்த்தப்பட்டோர் நலத்துறை /பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை போன்றவற்றில்லிருந்து எடுக்கப்படும்).
    mixie ஜாதி மதங்களை கடந்தது தானே.இலவச பஸ் பாஸ் ஜாதி மதங்களை கடந்தது தானே.
    பட்டதாரிகள் இல்லா வீடுகளில் இருந்து வந்ததால் மதிப்பெண் பெற்றவர்களில்
    தாழ்த்தப்பட்டவர்களுக்கு முதலிடம்/ MBC இரண்டாவது இடம்/பிற்படுத்தபட்டவர்கள் மூன்றாவது இடம்/ OC கடைசியில்.இது எதை காட்டுகிறது

    ReplyDelete
  19. நான் ஒரு அரசு ஊழியன்.குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் மாதம் 650 ரூபாய் இலவசம்.ரெண்டு குழந்தையோடு கணவனோ மனைவியோ அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஒரு increment உண்டு.ஓய்வு பெரும் போது அறுவை சிகிச்சைக்காக கிடைத்த பரிசு/இலவசம்/ஊக்கம் ரெண்டு லட்சத்தை தாண்டி விடும்.இந்தியாவில் மொத்தம் ஒன்ற கோடி அரசு ஊழியர்கள் உள்ளனர்.கணக்கு செய்து கொள்ளுங்கள்.

    மோடி நானோ தொழிற்சாலை தொடங்க 30000 கோடி மதிப்புள்ள நிலத்தை சும்மா கொடுத்துள்ளார்.டாடாவிற்கு கொடுத்தால் நாட்டிற்கு நல்லது ஏழைகளுக்கு அரிசி கொடுத்தால் மிகவும் கெட்டது நல்ல நியாயம்.

    அபோல்லோ மருத்துவமனைகள் முக்கால் வாசி ஒரு ரூபாய்க்கு ஒரு acre கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டவை.அது எல்லாம் ரொம்ப நல்லது ஆனா ஏழைகளுக்கு 30 % இலவசமாக செய்ய வேண்டுமே என்று கேட்டால் நாட்டுக்கு கெட்டது. ஓசி மருந்து வேலை செய்யாது இல்லே

    PSBB பள்ளிக்கு KK நகரில் பதினாலு கிரௌண்ட் அரசாங்க நிலம் இலவசமாக கொடுக்கப்பட்டது.ரொம்ப நல்லது.ஒரே சாதி புள்ளைங்க தான் படிக்குது அரசாங்கம் வெச்சிருக்கற இட ஒதுக்கீடு FOLLOW பண்ணுனு சொன்ன நாட்டுக்கு கெட்டது.

    ReplyDelete
  20. ஆற்காடு வீராசாமி சாத்தூர் ராமச்சந்திரன் நேரு ப சிதம்பரம் பாதர் சயீத் சுரேஷ் ராஜன் நாஞ்சில் மனோகரன் /நாயர் /கேரள கிருத்துவர் எல்லாரும் முற்பட்டவர்கள் பிரிவை சார்ந்தவர்கள் தான்.கலைஞர் என்ன அவங்க எல்லாருக்கும் எதிரியா.முற்பட்டவர் நாலே பிராமணர் மட்டும் தான்னு காட்டுறது சரியான கருத்து தானா
    உச்ச நீதிமன்றம் 50 % தான் ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்பதில் விடாபிடியாக இருப்பதால் தான் முற்பட்டவர்களில் ஏழைகளுக்கு ஒதுக்கீடு எனபது கிடைக்காமல் இருக்கிறது.மொத்தமாக அரசாங்க கல்லூரிகள்/வேலைகள் எல்லாம் ஏழைகளுக்கே கொடுத்து விடலாமே.அவர்களை நிரப்பி விட்டு மீதி உள்ள சீட்டுகளை அந்தந்த வகுப்பை சார்ந்த மற்றவர்களுக்கும் கொடுக்கலாமே .அப்போது பொது பிரிவு ஏழைகளும் பயன் பெறுவார்

    ReplyDelete
  21. Well analysed article

    ReplyDelete
  22. இட்லி வடையில் வெளியான s .வீ. சேகர் பேட்டியில் சலுகைகளைப் பற்றியும் அதில் எந்த ஜாதி ஏழை என்றாலும் ஏழை தானே என்றும் ஏழை பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு தராதது பற்றியும் சொல்லி இருந்தாரே. எதோ இங்கொன்றும் அங்கொன்றுமாக ஓரிரு குரல் எழும்புவதே இங்கே ஆச்சர்யம் தான்.

    ReplyDelete